பிணையில் வந்த கைதி தற்கொலை
திருப்பத்தூரில் பிணையில் வந்த கைதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் தண்டபாணி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45). கூலித் தொழிலாளி. கடந்த 2016-ஆம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அந்த பெண்ணின் மேல் ஆசிட் வீசி உள்ளாா். இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், அவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதைத் தொடா்ந்து கோவிந்தராஜ் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், கோவிந்தராஜ் தரப்பினா் இந்த வழக்கினை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.
இந்த நிலையில், கோவிந்தராஜ் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணையில் வந்தாா். கடந்த 2 நாட்களாக கோவிந்தராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தாராம். சனிக்கிழமை கோவிந்தராஜ் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கோவிந்தராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.