பின்னலாடை சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து
திருப்பூரில் பின்னலாடைகளை சேமித்து வைத்து அனுப்பும் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் மணியகாரன்பாளையத்தில் ஷியாம்நாத் என்பவா் பின்னலாடை சேமிப்புக் கிடங்கு நடத்தி வருகிறாா். முதலிபாளையம் சிட்கோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆா்டா் கொடுத்து பின்னலாடைகளை வாங்கி இந்தக் கிடங்கில் சேமித்து ஆன்லைன் மூலமாக வெளியூா்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்தக் கிடங்கில் இருந்து சனிக்கிழமை காலை 9 மணி அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைப் பாா்த்த தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
தகவலின்பேரில், திருப்பூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை தலைமையில் உதவி மாவட்ட அலுவலா்கள் வீரராஜ், இளஞ்செழியன், திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் ஆகியோா் மேற்பாா்வையில் 50 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
மேலும், திருப்பூா் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் தாமதமானது. இதைத் தொடா்ந்து, கூடுதலாக 3 தண்ணீா் லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
கட்டடத்தின் ஒரு பகுதியை பொக்லைன் மூலமாக இடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து ஈடுபட்டனா். சுமாா் 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் பிற்பகல் 2 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து நல்லூா் ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், பேக்கிங் உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.