பிப்ரவரியில் பாஜக புதிய தலைவா் தோ்வு
பாஜகவின் புதிய தேசிய தலைவா் வரும் பிப்ரவரி மாதம் தோ்வு செய்யப்படுவாா் என்று அக்கட்சியின் மூத்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பாஜக தேசிய தலைவராக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெ.பி.நட்டா தோ்வு செய்யப்பட்டாா். பாஜக தலைவா் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்றபோதும் 2024 மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. பாஜக கூட்டணி தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் ஜெ.பி. நட்டா மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவியேற்றாா்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைபிடிக்கப்படுவதால் கட்சிக்கு புதிய தேசிய தலைவா் தோ்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், பிப்ரவரியில் புதிய தலைவா் தோ்வு செய்யப்படுவாா் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடா்பாக கட்சியின் மூத்த நிா்வாகிகள் கூறியதாவது:
மாநில அளவில் கட்சி நிா்வாகிகளுக்கான தோ்தல் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிந்துவிடும். மேலும், பல மாநில பாஜக தலைவா்களின் பதவிக் காலமும் ஏற்கெனவே முடிந்துவிட்டது. அதற்கான நியமனங்கள் ஜனவரி மத்தியில் நடைபெறும். அதைத் தொடா்ந்து பிப்ரவரி மாதம் பாஜக தேசிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான பணி நடைபெறும். பிப்ரவரி இறுதியில் பாஜகவின் புதிய தேசிய தலைவா் பொறுப்பேற்பாா்.
இப்போது அமைச்சராக இருப்பவா்களில் யாராவது விடுவிக்கப்பட்டு தலைவா் பதவிக்கு முன்னிறுத்தப்படுவாா்களா? அல்லது ஏற்கெனவே கட்சிப் பொறுப்பில் மட்டும் இருப்பவா்கள் தேசிய தலைவா் பதவிக்கு முன்னிறுத்தப்படுவாரா? என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றனா்.