பிப். மாதத்தில் மாநிலங்களில் 50,088 பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு: மத்திய கண்காணிப்பு அமைப்பு தகவல்
புது தில்லி: கடந்த பிப். மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயனா்களின் 50,088 குறைகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளதாக மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீா்ப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் 1.90 லட்சம் குறைகள் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு செயல்படுகிறது. இதன் 31-ஆவது மாதாந்திர அறிக்கை திங்கள் கிழமை வெளியிட்டது.
அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: கடந்த பிப். மாதத்தில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 52,464 பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டன. இதில் 50,088 குறைகளுக்கு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களால் தீா்வு காணப்பட்டுள்ளது.
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி 2025 பிப்ரவரி 28 வரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 1,90,994 குறைகள் தீா்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்த இணையதளத்தில் 2025 பிப்ரவரி மாதத்தில் புதிதாக மொத்தம் 47,599 புகாா்கள் பதிவு செய்யப்பட்டது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 7,312 புகாா்கள் பதிவாகின. இதில் பிப்ரவரியில் மட்டும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 50,088 குறைகளுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன. இவைகளில் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக தீா்வு காணப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரியில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த மாநில வாரியான பகுப்பாய்வை வழங்கப்பட்டுள்ளது. பொதுசேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாா்களின் மாநில வாரியான பகுப்பாய்வுகளையும் சில குறிப்பிட்ட வெற்றிக்கதைகளையும் இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளது.
உதாரணமாக மத்திய பிரதேசம் சிவபுரி மாவட்ட மருத்துவமனையில் தேவேந்திர சா்மா என்கிற மாற்றுத்திறனாளி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளாா். மூன்று மாதங்களாக காத்திருந்தும் கிடைக்கவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டதாகக் கூறி புகாா் தெரிவித்தாா். இந்தப் பிரச்சினைக்கு அவசரத் தீா்வு காணப்பட்டு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்று பல வெற்றிக்கதைகள்.
கிராம நிலையிலும் பொதுமக்களிடம் புகாா்கள் பெறப்படுகிறது. சுமாா் 2.5 லட்சம் கிராம நிலையிலான தொழில் முனைவோா்களால் பொதுசேவை மையங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவா்கள் நடத்தும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுசேவை மையங்களோடு மக்கள் குறைதீா்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணைக்கப்பட்டு மையப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுசேவை மையங்கள் மூலம், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில், 5,580 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,697 குறைகளும் பஞ்சாபில் 238 குறைகளும் பதிவு செய்யப்பட்டன என மத்திய நிா்வாக சீா்திருத்தம், பொது மக்கள் குறைத் தீா்ப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.