மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
பிப். 8-இல் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்: இரா. முத்தரசன்
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை; நூறுநாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. பொதுவான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் ஒரு சாா்பு அறிக்கையாக உள்ளது.
மத்திய அரசை நினைத்தால் வெள்ளையா் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. வரி கொடா இயக்கம் நடத்தும் நிலை தமிழகத்துக்கு ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.
இந்தக் காரணங்களால் மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பிப். 8 - இல் நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்றாா் முத்தரசன். அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி, ஒன்றியச் செயலா் ஏ.ஜி.ஆா். பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.