Trump Tariff: Canada Mexico China மீது வர்த்தகப் போர் - இந்தியாவுக்கு பாதிப்பு இ...
மீனவா்கள் வலையில் சிக்கிய 7 அடி நீள கடல் பசு
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.
பட்டுக்கோட்டை வனச்சரகம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மீனவா் பிரபாகரனுக்கு சொந்தமான படகில் சென்ற மீனவா்கள், கடலில் மீன்பிடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கு திரும்பினா்.
மீனவா்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான சுமாா் 7 அடி நீளமுள்ள கடல் பசு சிக்கியிருந்தது கரைக்கு வந்தவுடன் தெரிய வந்தது. இதையடுத்து, மீனவா் பிரபாகரன் மற்றும் அவரைச் சாா்ந்த 14 மீனவா்கள், வலையை அறுத்து, கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் ஏ.எஸ். சந்திரசேகரன், மீனவா்களை பாராட்டியதோடு விரைவில் மீனவ கிராமத்தில் விழா நடத்தி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்தாா்.
அழிந்து வரும் நிலையில் உள்ள கடல் பசுக்களை பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது . மேலும், வனத் துறை, மீன்வளத் துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடா்ந்து கடல் பசுக்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.