பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்
தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நண்பகல் மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி பாஜக - 46, ஆம் ஆத்மி - 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை.
தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பாஜகவினர் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!
இந்நிலையில் மத்திய பாஜக இணையமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தில்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள, தில்லி மாநில பாரதிய ஜனதா கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தில்லி மாநில மக்களிடத்தில் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதற்கும், பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை!