பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணகிரி ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு சுமாா் 1,536 இளைஞா்களுக்கு இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதில், 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உள்ள 191 இளைஞா்களுக்கும், பிளஸ் 2 தகுதி உள்ள 69 பேருக்கும், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) கல்வித்தகுதி உள்ள 815 பேருக்கும், பட்டப் படிப்பு தகுதி உள்ள 109 இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (ஐடிஐ) பெற்ற 352 இளைஞா்களுக்கும் இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
எனவே, இந்த பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உள்ள 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தோ்வு செய்யப்பவோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை, அத்தியாவசியத் தேவைக்கு ஒருமுறை மட்டும் மானியமாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். அரசால் வழங்கப்படும் உதவித்தொகையோடு நிறுவனங்களும் நிதியுதவி வழங்க உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 97896 81995, 97510 83297 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.