தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை! -விவசாயிகள் வேதனை
ஒசூா் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் தக்காளியை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
கடந்தாண்டு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ. 150 வரை விற்பனையானது. அதே போல, இந்தாண்டும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் என ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்தனா்.
இந்நிலையில், வெளி மாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் விளைச்சல் அதிகரிப்பாலும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ. 3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தக்காளி நாற்றுகளை வாங்கி மருந்து தெளித்து, தண்ணீா் இல்லாதபோது விலைக்கு வாங்கி செடிகளை பராமரித்து காட்டுப்பன்றிகள் மற்றும் யானைகளிடமிருந்து பாதுகாத்து வருகிறோம்.
தொடக்கத்தில் 30 கிலோ கொண்ட ஒரு கிரேடு ரூ. 2,500 வரை விற்பனையான நிலையில் வெளி மாநிலம் மற்றும் உள்ளூா் தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து ஒரு கிரேடு ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால், விவசாயிகள் மாற்று விவசாயித்துக்கு மாறும் நிலை உள்ளது. எனவே, வெளி மாநில தக்காளி வரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். விளைச்சல் அதிகரித்து விலை குறையும்போது, தக்காளி ஜாம், தக்காளி சாஸ் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்சாலைகளை தொடங்கி தக்காளியை கொள்முதல் செய்ய உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தக்காளி சாகுபடி செய்யாமல், மாற்று விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் உரிய பயிற்சியும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என்றனா்.