பிரித்து வைத்த வனத்துறை: 3 ஆண்டுகளாக தேடல்... 200 கி.மீ பயணித்து காதலியை கண்டுபிடித்த ஆண் புலி!
காதல் மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் இருக்கிறது என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. சில விலங்குகள் சாகும் வரை ஒரே துணையுடன் வாழ்கிறது. சில விலங்குகள் தங்களது இருப்பிடத்தை தேடி பல கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறது.
ரஷ்யாவில் ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. ரஷ்யாவில் சிஹோடா மலைப்பகுதியில் அனாதையாக நின்ற இரண்டு புலிக்குட்டிகள் கடந்த 2012ம் ஆண்டு மீட்கப்பட்டது. அக்குட்டிகள் மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் வளர்க்கப்பட்டது. அவற்றிற்கு 18 மாதம் ஆனதும் வனப்பகுதியில் திறந்துவிட வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்று பெயரிட்டு இருந்தனர். பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்று பெயரிட்டு இருந்தனர். அவை இரண்டு ம் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து கொண்டு வாழவேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோமீட்டர் தூரத்தில் போரீஸை விட்டனர். போரீஸை சைபீரியா வனப்பகுதியில் விட்டனர்.
ஆனால் போரீஸ் அந்த இடத்தை தனது இருப்பிடமாக மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. மற்றொரு புறம் ஸ்வேத்லயா எங்கேயும் பயணம் செய்யாமல் தன்னை விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றிக்கொண்டு இருந்தது. இது வனத்துறை அதிகாரிகளுக்கு ஆச்சரியம் அளித்தது. இரண்டு புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
போரீஸ் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேதலயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த ஆறு மாதங்களாக இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அவர்களது காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக இப்போது ஸ்வேதலயாவிற்கு குட்டிகள் பிறந்திருக்கிறது. அவற்றின் வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.