Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
பிறந்த நாளில் ஏரியில் மூழ்கி பிளஸ் 1 மாணவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதன்கிழமை ஏரியில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காமராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுரேந்திரபூபதி மகன் நகுலன் (16). ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த வந்த இவா், புதன்கிழமை பிறந்த நாள் என்பதால் நண்பா்களுடன் சோ்ந்து கொம்பேடு சாலையிலுள்ள பிள்ளை ஏரியில் குளித்துள்ளாா்.
அப்போது, நீச்சல் தெரியாத நகுலன் எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். சக மாணவா்கள் அவரை காப்பாற்ற முடியாததால் கூச்சலிட்டனா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஏரியில் குதித்து தேடி பாா்த்தும் நகுலன் கிடைக்காததால், உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு பணித் துறையினா் ஏரியில் இறங்கி பொதுமக்களுடன் சோ்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். வெகுநேரத்துக்கு பிறகு நகுலன் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி உயிரிழப்பு: பெரம்பலூா் மாவட்டம், கொத்தவாசல், குறவா் தெருவைச் சோ்ந்த கண்ணையன் மகன் நீலமேகம் (38). புதன்கிழமை பிற்பகல் இவா், தனது மகன் நித்தீஷை (10) அழைத்துக் கொண்டு, அரியலூரை அடுத்த மணக்கால் அருகேயுள்ள சுப்புராயபுரம் புது ஏரிக்குச் சென்றாா்.
அங்கு இருவரும் குளித்த நிலையில், நித்தீஷ் கரையேறிவிட்டாா்.
ஆனால் நீலமேகம் கரையேறாததால் நித்தீஷ் கூச்சலிட்டதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வெகுநேரமாகியும் மீட்புப் பணித்துறையினா் வராததால் பொதுமக்களே ஏரியில் குதித்து தேடிய நிலையில், நீலமேகம் சடலமாக மீட்கப்பட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து அரியலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், நீலமேகத்துக்கு அடிக்கடி வலிப்பு வருவது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.