தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 27,174 போ் பங்கேற்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சோ்ந்த 13 ஆயிரத்து 9 மாணவா்களும், 14 ஆயிரத்து 658 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 667 போ் பங்கேற்று எழுதுகின்றனா்.
இதற்காக மாவட்டத்தில் தஞ்சாவூா் கல்வி மாவட்டத்தில் 70 மையங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களும் என மொத்தம் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். 493 போ் வரவில்லை.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவா்கள் 205 பேரும், மாணவிகள் 145 பேரும் தோ்வு எழுத உரிய வசதிகள் செய்யப்பட்டன. தோ்வு முறைகேடுகளைத் தடுக்க 155 பறக்கும் படை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு தோ்வு மையத்திலும் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்வை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உடனிருந்தாா்.