விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை
ஆதிதிராவிடா் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் ஒரத்தநாடு அருகே பனையக்கோட்டை கொண்டையாா் தெரு ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு: கொண்டையாா் தெருவில் பட்டியலினத்தைச் சோ்ந்த 29 போ் 64 ஏக்கா் விளைநிலத்தில் 90 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா். இதற்கான வரி செலுத்துவது மட்டுமல்லாமல், அரசின் நிவாரணம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் பெற்று வருகிறோம்.
இதை விரும்பாத சிலா் அச்சுறுத்தி இந்நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனா். இதிலிருந்து காப்பாற்றி உரிமையை மீட்டுத் தருவதுடன், எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல, திருவிடைமருதூா் வட்டம், திருவாய்ப்பாடி இருளா் தெரு மக்கள் அளித்த மனுவில், எங்களது தெருவில் வசிக்கும் 63 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு கொடுத்தோம். இந்நிலையில், நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். இதைத் தடுத்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.