புகை - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
கார்த்திக். என்னுடைய பள்ளித் தோழன், மேடைப் பாடகன், சில சமயங்களில் பஜாஜ் இன்சூரன்ஸ் போடச் சொல்லிக் கழுத்தை அறுப்பவன்.
கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு அவனிடமிருந்து அழைப்பு வந்தபோது, 'ஒரு இன்சூரன்ஸ் போட்டுக்கடா... நல்ல ஆஃபர்ல பண்ணித் தரேன்...' என்றான்.
'டவர் சரியா கிடைக்கல மச்சி... ஒரு நிமிஷம் இரு... திரும்பக் கூப்படுறேன்...' எனச் சொல்லிவிட்டு போனை அணைத்தேன். அதன் பிறகு அவனிடத்தில் பேசியதாக நினைவில்லை.
இன்று ஹாஸ்பிடலில் உயிருக்குப் போராடுகிறான் எனத் தெரியவந்த போது, மனம் இறுகியது.
பூமிநாதன் தான் விஷயத்தைச் சொன்னான்.
'என்னாச்சு டா அவனுக்கு?'
'கேன்சர்'
'அய்யயோ...என்ன கேன்சர்?'
'வாய்ல...'
ஊர்த் திருவிழாவின் போது,'எங்க கருப்பசாமி...அவன் எங்க கருப்பசாமி' என வீரமணிதாசன் குரலை கார்த்திக் எடுக்கும் போதெல்லாம்,'இவன் வாய்ல அந்த வீரனே குடி இருக்காருடா...' என நான் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.
'அவன் வளைச்சு வளைச்சு சிகரெட்ட இழுக்கும் போதே தெரியும் டா...' என்றேன்.
'இல்ல மச்சி... பாடிப் பாடி அவன் தொண்டைல சத வளந்துடுச்சு...அது கேன்சரா மாறிடுச்சு மாமே...'
பூமிநாதன் நொடிப் பொழுதில் நீட் எக்ஸாம் எழுதாத டாக்டராக மாறினான். அவனே மேலும் தொடர்ந்தான்.
'மச்சி...நானு, சைக்கிள் ரவி, சிவலிங்கம் எல்லாரும் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டோம்...உன்ன தான் புடிக்கவே முடில...'
'சரி டா நான் தனியா போய் பாத்துட்டு வரேன்...பெரியாஸ்பத்திரி தான?'
'ஆமா மாமே...'
அடுத்தநாள் ஹாஸ்பிடல் போகும் வழியெல்லாம், கார்த்திக்கின் முகமே கண்முன் வந்து சென்றது.
எட்டாண்டுகளுக்கு முன்பு, 'டேய்...அவ வீட்ல ஒத்துக்கற மாதிரி தெரியல...ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்... உன்கிட்ட தான் முதல்ல சொல்றேன்...' என கார்த்திக் என்னிடம் சொன்னபோது, நான் நான்காவது ஆள்.
'சைக்கிள் கிட்டேயும் இதையே தான் சொல்லியிருக்க போல...' என்றதும்,'ஹி...ஹி...' எனக் கேவலமாக சிரித்தான். இது தான் கார்த்திக். 'அட்டக்கத்தி' படத்தில் வரும் தினேஷ் போல, அடிக்கடி மொக்கை வாங்குவான்.
சில பல களேபரங்களுக்குப் பின்னர், கார்த்திக் வீட்டார் மட்டும் அவர்களை ஏற்றுக் கொள்ள, திருமண விருந்தாக விஸ்கியுடன் காடை பிரியாணி விருந்து வைத்தது மறக்கவே முடியாது.
'மைதிலி ம்யூசிக் பேண்ட்' என மனைவியின் பெயரிலேயே ம்யூசிக் பேண்ட் ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து செயல்பட முடியாமல் கடனில் சிக்கினான். நடு நடுவே வெவ்வேறு தொழில்கள் பார்த்து, சமீபத்திய தொழில் தான் இந்த இன்ஷுரன்ஸ்.
'மாவா'வை, வாயின் இடுக்கில் வைத்துக் கொண்டு கஸ்டமர்களிடம் இன்ஷுரன்ஸ் பற்றி பேசினால் என்னவாகும்? அவனை நம்ப யாருமே தயாராக இல்லை.
மாவா மட்டுமல்ல....ஸர்தா, பான், சிகரெட், பீடி. அத்தனை பழக்கமும் கார்த்திக்கிடம் உண்டு.
'பெரியாஸ்பத்திரி ஸ்டாப்லாம் இறங்குங்கப்பா...'
கடந்த கால நினைவுகளில் மூழ்கிய வேளையில், ஹாஸ்பிடல் கட்டிடம் கண்ணில் பட்டது. அதன் முகப்பில் இருந்த பழக்கடையில், ஆரஞ்சு பழங்களையும் ஆப்பிள்களையும் வாங்கிக் கொண்டேன்.
ஹாஸ்பிடல், என்றாலே எனக்கு அலர்ஜி. அலர்ஜி என்பதை விட ஒரு வித பயம். மனைவி பிரசவத்தின் போது, சில மணி நேரங்கள் கூட ஹாஸ்பிடல் சூழலை என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை! கார்த்திக்கை நலம் விசாரித்துவிட்டு விரைவிலேயே கிளம்பி விட வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பார்வையாளர்கள் கூட்டம், சற்று அதிகமாகவே காணப்பட்டது. குறுக்கும் நெடுக்குமாக கையில் மருந்து சீட்டுடன் மக்கள் பரபரத்தனர்.
'இங்கே புகைப்பிடித்தல் கூடாது' என எழுதியிருந்த எச்சரிக்கை பலகையைப் பார்த்தபடியே, பெரியவர் ஒருவர் புகை விட்டுக் கொண்டிருந்தார். அவர் தலையில் பெரிய கட்டு. கையில் நரம்பு ஊசி போடுவதற்கான ரோஸ் கலர் குழாய் பொருத்தப் பட்டிருந்தது.
நோயாளிகளுக்கெல்லாம் ஒரு முகம் என்றால், அவர்களுடன் துணையாக இருப்பவர்களுக்கு தனி முகம். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு கதை சொல்லும். நான் பல்வேறு முகங்களைக் கடந்து, கேன்சர் வார்டைத் தேடி அலைந்தேன்.
கோலிக் குண்டு கண்களுடன் எதிரே ஒரு நர்ஸ் வந்தாள். இவ்வளவு வெக்கையிலும் இறுக்கமான அந்த வெள்ளை உடை. எனக்கு வியர்த்தது! சமீபத்தில் திருமணமான அறிகுறிகள் அவளிடம்.
'மேடம்...இங்க கேன்சர் வார்டு எங்க இருக்கு?'
'நேரா போனா ஒரு கேண்டீன் வரும். அதைத் தாண்டி லெஃப்ட் எடுத்தா கேன்சர் வார்டுதான்...'
'தேங்க்ஸ் மேட...' .
சொல்லி முடிப்பதற்குள் கோலிக் குண்டு சென்றுவிட்டாள்.
'புற்றுநோய் உள் நோயாளிகள் பிரிவு'
கருநீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்.
நடுத்தர வயதுடைய பெண் ஒருத்தியை வீல் சேரில் கிடத்தி விட்டு, நுழைவாயில் கதவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் வார்டு பாய் ஒருவன்.
அப்பெண்ணின் ஒருபக்க மூக்கில் ட்யூப் போடப் பட்டிருந்தது. உதடுகள் தடித்திருந்தன. தலையில் முன் பக்க வழுக்கை. வெற்றுப் பார்வையுடன், பிணம் போல காட்சியளித்தாள் அவள். ஓரப்பார்வையில் அவளைக் கடந்து உள்ளே சென்றேன்.
'இங்க கார்த்திக்னு ஒரு பேஷன்ட்...'
'பேஷன்ட் அப்பா பேரு...?'
'ராமச்சந்திரன்...இல்ல இல்ல... ரவிச்சந்திரன்...'
'ஓ...அவரா...பக்கல் கேன்சர் பேஷன்ட்...'
ட்ரெய்னிங் நர்ஸ் போல. தேர்ந்த நர்ஸ்களுக்கே உண்டான அந்த அலட்சிய உடல்மொழி இன்னும் புகவில்லை.
ஆள்காட்டி விரலை மேலே காண்பித்து, 'ஃபர்ஸ்ட் ஃப்ளோர்...பெட் நம்பர் ரெண்டு...' என்றவர், பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை,'என் கூட வாங்க சார்...' என சொல்லிவிட்டு முன் நடந்தார்.
கார்த்திக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒருவனைக் காண்பித்து, 'இவரு தான் கார்த்திக்' என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கார்த்திக், முழுவதுமாக உருமாறியிருந்தான்.
வெடித்த பலூன் போல அவன் உடல் சுருங்கி இருந்தது. கண்களில் ஒளி இல்லை. வாய்ப் பகுதி சிதைந்திருந்தது. தார் போல பற்கள் எல்லாம் கருகியிருந்தன. அவனால் வாயை மூட முடிவில்லை. எனவே ஒரு பக்க வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.
இடது பக்க மூக்கின் வழியே உணவு செலுத்தும் குழாய் இணைக்கப்பட்டிருந்தது. கதிர்வீச்சு சிகிச்சையின் விளைவால், கழுத்துப் பகுதி கருத்து நீர்த்துப் போய் இருந்தது.
எந்நேரமும் சிகரட்டை சுழலும் இரு கரங்கள் அசைவற்றுக் கிடந்தன. கால்களில் சதையே இல்லாமல் பொறியில் அகப்பட்ட எலி போல சுருண்டு கிடந்தான் கார்த்திக்.
'வாடா...' என்பதைப் போல தலையசைத்தான். எழ முயற்சி செய்து தோற்றுப் போனான்.
'வாங்கண்ணே...' என்றபடி, அவன் எச்சிலை துணி கொண்டு துடைத்துக் கொண்டிருந்தாள் மைதிலி.
சிவலிங்கம் திருமணத்தின் போது மனைவியை எதிரில் அமர்த்தி, 'என்னாச மைதியே...என்னை நீ காதலியே...' என டி.ஆர். ஸ்டைலில் கார்த்திக் பாடியபோது, வெட்கத்தால் சிவந்திருந்த மைதிலியின் முகமா இது?
பெருநோயுடன் போராடுபவர்களின் மனைவிகள், தங்களது சுயத்தை விரைவில் இழந்து விடுகின்றனர்.
மைதிலி முகத்தில் எழில் குறைந்து வெறுமை கூடியிருந்தது.
நான் கார்த்திக் பக்கம் திரும்பினேன். 'என்னடா...இப்படி ஆகிட்ட...?' சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினேன். ஹாஸ்பிடலுக்கு நலம் விசாரிக்கப் போகும்போது, நோயாளிகளிடம் கேட்கக்கூடாத வார்த்தைகள் இவை.
வேறென்ன பேசுவது? இந்நேரத்தில் நான் என்ன பேசினாலும், அது பெயரளவில் தான் இருக்கப் போகிறது.
கண்முன்னே ஒருவன் நோயால் அவதிப் படுவதைப் பார்க்கும் போது, நாம் அணிந்திருக்கும் உயர் ரக செருப்பு கூட கூச்சத்தை வரவழைத்து விடும்.
ஊமையாய் அவர்கள் முன்பு நின்றேன். சிறிது நேர அமைதியை மைதிலி தான் கலைத்தாள்.
'எத்தினி தடவ சொல்லியிருப்பேன். இந்தப் பாழாப்போன சிகரெட்ட விட்டுத்தள்ளுனு. கேட்டுச்சா இது...?'
நான் என் பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டு பார்த்தேன். நான்கு 'கோல்டு ஃபிளேக்ஸ்'. வெளியே சென்றதும் முதல் வேலையாக, இவற்றைத் தூக்கி எறிய வேண்டும்.
'இப்போ பாருங்க...நானும் என் பொண்ணும் அநாதையா தெருவுல நிக்கறோம்...இதுக்கு தான் பெத்தவங்களத் தூக்கி போட்டுட்டு இவன் கூட வந்தேனா...?
இப்போது எதுவும் பேசவேண்டாமே என்பதைப் போல கையசைத்தேன் நான்.
கார்த்திக்கின் கழுத்தின் மத்தியில் மெஷின் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அந்த மெஷின் ஓட்டை வழியே,'ஸ்...ஸ்...' எனவரும் காற்று,'மைக் டெஸ்டிங்...மைக் டெஸ்டிங்...' என அவன் மேடையில் சொல்வது போலவே இருந்தது.
மூக்கில் இருந்த ட்யூப் வழியாக உணவு செலுத்தப்படும் போதெல்லாம், நெஞ்சை அடைக்கும் இருமல் வேறு. இரும்பும் போதெல்லாம் ட்யூப்பிலிருந்து உணவு ஆங்காங்கே சிதறிக் கொண்டிருந்தது.
என் கையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களும் ஆப்பிள்களும் என்னைப் பார்த்து சிரித்தன.
நான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை சந்தித்தது இல்லை. கார்த்திக்கின் மீது எழுந்த பரிதாபத்தையும் தாண்டி, ஹாஸ்பிடல் சூழல் திடீரென எனக்கு பயத்தை விளைவித்தது. அவ்விடத்தை விட்டுக் கிளம்பும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தீடீரென கார்த்திக்கின் மூச்சுக்காற்று வேகம் அதிகமானது. அவனுடைய ஒடுங்கிய நெஞ்சுப் பகுதி, மேலும் கீழுமாக சாமி ஆடியது. அவனுடன் இணைக்கப்பட்டிருந்த மிஷின்,'பீப்....பீப்...' என அலறியது. கார்த்திக்கின் பல்ஸ், தாறுமாறாக தாண்டவம் ஆடுவதைக் கண்டேன்.
உயிர் ஊசலாடுகிறது என்பார்களே. அதை நேரில் கண்டேன்.
அதைக் கண்டவுடன் எனக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. வியர்த்துக் கொட்டியது. நெஞ்சு படபடத்தது. அடிவயிற்றில் ஏதோ ஒன்று பிசைவது போன்ற உணர்வு. வாந்தி வருவதன் முன் நிலை. மெல்ல நகர்ந்தேன். படி இறங்கினேன்.
சிறிது நேரத்தில் மைதிலி வெடித்து அழும் சத்தம் கேட்டது.
வார்டின் பின்புறம் ஒரு ஆலமரம் தெரிந்தது. அதன் ஒரு கிளை முடியும் இடத்தில் இருந்த 'ஸ்டோன் பென்ச்' ஒன்றில் அமர்ந்து கொண்டேன். நெஞ்சு படபடப்பும் உடல் நடுக்கமும் இப்போதைக்கு குறையாது என்றே தோன்றியது.
-சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...