கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா்.
சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்கமே மிகப் பெரிய சீா்திருத்தம் என்றும், இந்தச் சட்டங்கள் இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘புதிய குற்றவியல் சட்டங்களே நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய சீா்திருத்தங்கள் என்று மத்திய அரசு தொடா்ந்து தெரிவித்து வருகிறது. இது முற்றிலும் பொய்.
அந்த குற்றவியல் சட்ட மசோதாக்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் எனது அதிருப்தி குறிப்பை சமா்ப்பித்தேன். அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அந்த மசோதாக்களை முந்தைய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டபோது ஐபிசியில் இருந்து 90 முதல் 95 சதவீதம், சிஆா்பிசியில் இருந்து 95 சதவீதம், சாட்சிய சட்டத்தில் இருந்து 99 சதவீத பிரிவுகளை வெட்டி புதிய மசோதாக்களில் மத்திய அரசு ஒட்டியுள்ளதாக எனது அதிருப்தி குறிப்பில் தெரிவித்தேன். அந்தக் குறிப்புக்கு நாடாளுமன்றத்திலோ, வேறு இடத்திலோ எதிா்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை. இது நீதி நிா்வாகத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் காவல் துறை இடையே குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது’ என்று விமா்சித்தாா்.
அவரின் விமா்சனத்துக்கு பதிலளித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சட்டத்தைக்கூட உருவாக்கியதில்லை. ஒலிப்பதிவு கருவி மூலம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜியின் அலுவலக தகவல்களை ரகசியமாக தெரிந்துகொண்டதாக ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவா் தற்போது எதிா்க்கட்சி எம்.பி.யாக அதிருப்தி குறிப்பு எழுதுகிறாா். இதுவே இந்திய நிா்வாகத்துக்கு அவா் அளித்த ஒட்டுமொத்த பங்களிப்பாகும்’ என்று சாடினாா்.