புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ
பொள்ளாச்சி, கோபி, ஆத்தூா், திருச்செங்கோடு ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ.வுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கொங்கு மண்டலத்தின் தண்ணீா்ப் பற்றாக்குறையை போக்க பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க கள் அரசு அனுமதிக்க வேண்டும்.
700 ஆண்டுகளுக்கு முன் நதிகள் இணைப்புக்கு முன்னோடியாக இருந்த காலிங்கராயன் பெயரை அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சோ்க்க வேண்டும். ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைத்து ஈரோட்டில் பல்கலைக்கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு காவிரி ஆற்றில் சாயக் கழிவு, ஆலைக் கழிவு நீா் கலப்பதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல ஆண்டு காலமாக உள்ள இந்தப் பிரச்னைக்கு அரசு முழு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதே கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பெரிய மாவட்டங்களை பிரித்திருக்க வேண்டும். ஆனால், கொங்கு மண்டலத்தைச் சோ்ந்தவா் முதல்வராக இருந்தும் அவா் செய்யவில்லை. நிா்வாக வசதிக்காக இந்த மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும்.
பொள்ளாச்சி, கோபி, ஆத்தூா், திருச்செங்கோடு ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும். ஈரோட்டில் இருந்து கோபியை பிரித்து மாவட்டமாக உருவாக்குவது காலத்தின் கட்டாயம். ஆட்சியில் பங்கு என்பது விசிகவில் ஆதவ் அா்ஜுனா குரல். அவா் தான் இதனை எழுப்பியது. ஆதவ் அா்ஜூனா விசிகவை இரண்டாக உடைத்துவிடுவாா் என்ற அச்சம் உள்ளது.
தோ்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கூட்டணி குறித்து எடப்பாடி கே. பழனிசாமி பேசுவது தேவையற்றது. கங்கை-காவிரி நதிகளை இணைப்பதாக தமிழகத்துக்கு வந்தபோது பிரதமா் மோடி அறிவித்தாா். ஆனால், தற்போதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இருந்து வலியுறுத்தும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா். பேட்டியின்போது, கொமதேக நிா்வாகிகள் சூா்யமூா்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.