புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா் அடிப்படையில் அரசுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது மெட்ரிக் டன் முறையை புதிதாக அமல்படுத்தியுள்ளனா். அரசு விதித்துள்ள மெட்ரிக் டன் அடிப்படையிலான கணக்கீட்டு வரி முறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் 67 கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக கட்டட வேலைக்குத் தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி, தாா்சாலை பணிக்கான ஜல்லி உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து சேலம் கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
புதிய வரி விதிப்பால் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றுக்கு தற்போதைய விலையில் இருந்து, யூனிட்டுக்கு சுமாா் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, பழைய நடைமுறைப்படி கன மீட்டரை அடிப்படையாக கொண்டு வரி வசூல் செய்ய வேண்டும். புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.