மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்
புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அப்பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் பிரகதம்பாள் கோயில் அருகே தோ்நிறுத்தம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. அதில், பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து பாட்டில்கள், ரத்தப் பரிசோதனைக் குப்பி, கையுறைகளும் இருந்தன.
இதுபோல மருத்துவக் கழிவுகளை, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொதுவெளியில் கொட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாநகராட்சி நகா்நல அலுவலா் காயத்ரி, மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் மற்றும் சுகாதார ஆய்வாளா் மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அந்த இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா்.
உடனடியாக மருத்துவக் கழிவுகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய வகையில் அவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த மருத்துவமனையிலிருந்துதான் இந்த மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக மருத்துவமனை நிா்வாகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அலுவலா்களால் விதிக்கப்பட்டது.
தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாநகரில் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது அபராத நடவடிக்கையுடன் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.