புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்... போலீஸார் காயம்..!
கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று முன் தினம் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்த சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு, `பெரியார் குறித்து ஆதாரமில்லாமல் பேசும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழகம் முழுக்க எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆதாரம் கேட்கும் விதமாகவும், நேற்று காலை நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் 50-க்கும் மேற்பட்ட த.பெ.தி.க -வினர் குவிந்திருந்தனர். அப்போது சீமான் வருகைக்காக அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளை பிடுங்கி எரிந்த அவர்கள், சீமானின் புகைப்படங்களை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர்.
கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தை, அங்கிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பார்த்து கோபமடைந்தனர்.
அதையடுத்து, சீமானுக்கு வாழ்த்து கோஷமிட்டபடி தங்கள் கட்சி கொடியுடன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நின்றிருந்த இடத்தை நோக்கி வேகமாக முன்னேறினார்கள். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் உஷாரான போலீஸார், பேரிகார்டுகள் வைத்து இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை தாக்கி கீழே தள்ளினர். அதில் அஜித்குமார் என்ற காவலர் காயமடைந்தார். அதைப் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்ததால், அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. அதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்த போலீஸார், அவர்களை அங்கிருந்து வேனில் ஏற்றிச் சென்றனர்.