கலப்பு திருமணம் செய்து கொண்ட கணவரின் சகோதரி... விவாகரத்து கோரிய பெண் - வழக்கில் நடந்தது என்ன?
இன்றையக் காலகட்டத்தில், சில நேரங்களில் விவகாரத்துக்கான காரணங்களை நாம் கேள்விபடும்போது சில சமயங்களில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அந்த வகையில் பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரி வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டதற்காக விவாகரத்து கோரியிருக்கும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2018-ல் திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார். திருமணம் ஆன இரண்டு நாட்களிலேயே அந்தப் பெண் கணவனை விட்டுப் பிரிந்திருக்கிறார். காரணம் அந்த கணவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள். ஆனால், அவர் தனக்கு இரண்டு சகோதரிகள் என்று அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். திருமணம் அன்று தன்னுடைய கணவருக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் இருப்பதும்.
அதில் ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதும் அந்தப் பெண்ணிற்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அந்தப் பெண் தனது கணவரின் சகோதரி வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துக்கொண்டது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இதே காரணத்தைக் கூறி குஜராத்தில் உள்ள பாவ்நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்தும் கோரியிருக்கிறார். கணவர் மனைவியிடம் இப்படி ஒரு விஷயத்தை மறைத்தது தப்பு என்ற அடிப்படை காரணத்திற்காக மட்டும் நீதிமன்றம் தற்போது இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது. தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இதெல்லாம் விவாகரத்திற்கு ஒரு காரணமா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.