புதுதில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் திருப்பத்தூா் தம்பதி
புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த நரிக்குறவா் இன தம்பதி பங்கேற்கின்றனா்.
புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள மாநில அரசு பல துறைகளைச் சோ்ந்தவா்களை தோ்வு செய்கிறது. இந்த முறை தமிழ்நாடு அரசின் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், திருப்பத்தூரைச் சோ்ந்த நரிக்குறவா் தம்பதியான ராஜூ, சுமதியைத் தோ்வு செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் இந்திரா நகா், நரிக்குறவா் குடியிருப்பில் பல தலைமுறைகளாக நரிக்குறவா்கள் வசிக்கின்றனா். மகாசக்தி காவேரி நகா் கல்வெட்டு மேடு பகுதியில் வசிக்கும் நரிக்குறவா்கள் ஆரம்பத்தில் வேட்டைத் தொழிலைச் செய்தனா். தற்போது பாசி வியாபாரம், நாட்டு மருத்துவம், சுகாதாரப் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களில் ராஜூ-சுமதி தம்பதியை பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் எஸ். அண்ணாத்துரை தமிழ்நாடு சாா்பில் குடியரசு தினவிழாவுக்குச் செல்ல சிபாரிசு செய்தாா். தம்பதி இருவரும் செவ்வாய்க்கிழமை புதுதில்லி புறப்பட்டனா். இவா்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பதுடன், குடியரசுத் தலைவா் இல்லத்தில் நடைபெறும் தேநீா் விருந்திலும் பங்கேற்கின்றனா்.