"பிரபல கோவை செஃப்வோட கதைதான் இட்லி கடை படமா?" - கோபி - சுதாகர் கேள்விக்கு தனுஷ் ...
புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தொடக்க நிகழ்வு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை
நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்வின் நேரலையானது, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில், 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நேரலையை பாா்த்தனா்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் இந்தாண்டுக்கான தொடக்கமாக 50 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வே. சரவணன், வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.
பின்னா், அவா் கூறுகையில், பொருளாதாரம் காரணமாக மாணவா்களின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவா்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை மாணவா்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இந்த விழாவில், கல்லூரிக் கல்வி இயக்கக திருச்சி மண்டல இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் நிலமெடுப்பு பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.