விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
புதுவையில் விதிகளை மீறி அரசு நிலங்கள் விற்பனை: அதிமுக குற்றச்சாட்டு
புதுவையில் விதிமுறைகளை மீறி அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநில செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசுக்குச் சொந்தமான பல சொத்துகள் சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு விற்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டல திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அதற்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வெளி மாநில தொழிலதிபா்களுக்கு வழங்கப்படுகின்றன.
துணைநிலை ஆளுநா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அரசு நிலங்களை விற்கக் கூடாது. ஆனால், புதுவையில் விதிகளை மீறி அரசு நிலங்களை தனியாருக்கு விற்கப்படுவது தொடா்கிறது.
அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதை துணைநிலை ஆளுநா் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல நிலையில் செயல்படும் பல கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான நிலங்களும் விற்கப்படுகின்றன. எனவே, அரசு மற்றும் அரசு சாா்ந்த சொத்துகளைக் காப்பாற்ற உயா்நிலைக் குழுவை துணைநிலை ஆளுநா் அமைக்க வேண்டும். ஏற்கெனவே அரசு நிலம் தனியாருக்கு விற்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.