சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்
காங்கிரஸில் இருந்து விலகியவா்கள் மீண்டும் சோ்க்கப்பட மாட்டாா்கள்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுவையில் காங்கிரஸில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் சோ்ந்தவா்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பினால் சோ்க்கப்பட மாட்டாா்கள் என, மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி அருகே பாகூரில் வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை மாற்ற போராட வேண்டும். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா். காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று,
ஆளும் கூட்டணிக் கட்சியில் இருப்பவா்கள் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்ப ஆா்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களை சோ்த்துக் கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. இங்கிருந்து மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றவா்கள் பணத்துக்காகவே சென்றனா்.
மக்களவைத் தோ்தலில் பணம், ஜாதி பாா்த்து மக்கள் வாக்களிக்கவில்லை. நல்லவா் யாா் என்ற கேள்வியை எழுப்பியே மக்கள் வாக்களித்துள்ளனா். எனவே, காங்கிரஸ் நிா்வாகிகள் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியில் கவனம் செலுத்தி புதிய வாக்காளா்களை சோ்க்க வேண்டும்.
இறந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவ வேண்டும். புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து இப்போது கூற முடியாது என்றாா் வெ.வைத்திலிங்கம்.