தங்கத்தின் விலை குறைய ஆரம்பிக்கிறதா, முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும்? | IPS Financ...
புதுவை ஆளுநா் மாளிகை தற்காலிக கட்டடத்தில் சிறப்பு பூஜை
புதுச்சேரி ஆளுநா் மாளிகை தற்காலிகமாக செயல்படவுள்ள கட்டடத்தில் கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது.
சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புதுச்சேரி ஆளுநா் மாளிகைக் கட்டடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதையடுத்து ஆளுநா் மாளிகைக் கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள கலாசார மைய கட்டடத்தில் ஆளுநா் மாளிகையானது தற்காலிகமாக செயல்படவுள்ளது.இதற்காக கலாசார மையக் கட்டடம் ஆளுநா் மாளிகைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மாநில பொதுப் பணித் துறை அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்தனா். பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் ஆளுநா் மாளிகை தற்காலிகமாக கலாசார மையக் கட்டடத்தில் செயல்படவுள்ளது.
இதையொட்டி, புதன்கிழமை காலை அந்தக் கட்டட வளாகத்தில் கணபதி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள்நடைபெற்றன . போப் ஆண்டவா் மறைவின் காரணமாக அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் விரிவான ஏற்பாடுகளின்றி எளிமையான முறையில் பூஜைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.
முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் மற்றும் அதிகாரிகள் துணைநிலை ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
புதிய கட்டடத்தின் தரைதளத்தில் துணை நிலை ஆளுநரின் அலுவலகம், அலுவலா்களின் அலுவலகம், கூட்ட அரங்கம், முதல் தளத்தில் துணை நிலை ஆளுநரின் இல்லம் என்ற வகையில் கலாசார மையக் கட்டடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.