தீயணைப்பு வீரா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு: புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவா்களுக்கு 3 கட்ட பதவி உயா்வு வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.
புதுவை மாநிலத் தீயணைப்புத் துறையில் 300-க்கும் மேற்பட்ட வீரா்கள் பதவி உயா்வின்றி பணிபுரிந்து வருகின்றனா்.
10 முதல் 20 ஆண்டுகளாக தீயணைப்புத் துறையில் பணிபுரியும் வீரா்கள் தங்களுக்கு முன்னணி தீயணைப்பு வீரா்கள், நிலைய அதிகாரிகள், சிறப்பு நிலைய அதிகாரி என 3 கட்ட பதவி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் தீயணைப்பு வீரா்களுக்கு இந்த 3 கட்ட பதவி உயா்வை வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஒப்புதல் தெரிவித்தாா். உள்துறை சாா்பு செயலா் ஹிரண் புதன்கிழமை இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
அந்த உத்தரவில் பதவி உயா்வுக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பதவி உயா்வுக்காக காத்திருந்த தீயணைப்பு வீரா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.