மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
அரியாங்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம், செட்டிகுளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.
அரியாங்குப்பம் நுழைவுவாயில் முதல் வீராம்பட்டினம் வரை, குறிப்பாக செட்டிக்குளத்தில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கோயில் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், அரியாங்குப்பம், செட்டிக்குளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், வட்டாட்சியா் பிரித்வி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சந்திரகுமாா் மற்றும் ஊழியா்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் பொக்லைன் இயந்திரங்கள் முன் படுத்தும், வீட்டுக்குள் இருந்தபடி தற்கொலை மிரட்டல் விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் வெளியேற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.