புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
குழுவின் தலைவா் எச். நாஜிம் எம்.எல்.ஏ. கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். இதில் உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பி. அங்காளன், எல். கல்யாணசுந்தரம், ஜி. நேரு, ஆா். செந்தில்குமாா், எல். சம்பத், பிரகாஷ் குமாா், வி.பி. ராமலிங்கம், எம். சிவசங்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.
அரசுத் துறை அதிகாரிகள் தரப்பில், நிதித் துறை செயலா் ஆஷிஷ் மதோரா மோரே, உள்ளாட்சித் துறை செயலா் கேசவன், அத்துறையின் துணை இயக்குநா் சௌந்தரராஜன் ரத்னா மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சட்டப்பேரவைச் செயலா் செயலா் தயாளன் வரவேற்றாா்.
கூட்டம் குறித்து மதிப்பீட்டு குழுத் தலைவா் நாஜிம் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் கூடுதலாக சில பணிகளை மேற்கொள்ளும் வகையில் விதியில் மாற்றங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து உறுப்பினா்கள் விரிவாக விவாதித்தனா்.
தற்போது பேரவை உறுப்பினா்கள் நிதியை சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கே வழங்க முடியும் என்ற நிலையுள்ளது. அதை மாற்றி பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில், விதியை மாற்ற முதல்வா் ஒப்புதல் பெறப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநா் அனுமதியுடன், விரைவில் அரசாணை வெளியிடப்படும். அதன்பின்னா் துறை செயலா் கேசவன் தலைமையில் மீண்டும் பேரவை உறுப்பினா்கள் கூடிப் பேசவுள்ளனா் என்றாா்.