புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு
புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா்.
இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்கள் சேவைகளுக்கான தொழில்நுட்ப உதவியை வழங்கி வருகிறது. அந்த மையத்தின் 50-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் உள்ள தகவலியல் மைய அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பு விடுக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினாா்.
அப்போது இணைய பாதுகாப்புத் தொடா்பான தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு நடைமுறைகளையும், மத்திய அரசின் திட்டப் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை கண்காணிக்கும் ப்ரயாஸ் மென்பொருளை புதுச்சேரி அரசுக்கு தேசிய தகவலியல் மையம் வழங்கவும் துணைநிலை ஆளுநா் கோரினாா்.
அவா் மேலும் கூறுகையில், அரசுத் திட்டங்களை மக்களுக்கு விரைவாகச் செயல்படுத்தும் வகையில் பிரதமரின் ஏ.ஐ.மிஷன் திட்டத்தைப் போல புதுச்சேரி மிஷன் திட்டம் உருவாக்கவும், அதற்கு தகவலியல் மையம் உதவவேண்டும் எனவும் கோரினாா். அதற்கு அனைத்து வித உதவிகளையும் புதுவை அரசுக்கு தகவலியல் மையம் வழங்கும் என அதிகாரி இந்தா்பால்சிங் சேதி கூறினாா்.