புதை சாக்கடை குழாய் சீரமைப்பு பணி ஓரிரு நாளில் நிறைவுபெறும் தஞ்சாவூா் மேயா் தகவல்
தஞ்சாவூா் விளாா் சாலையில் பழுதடைந்த புதை சாக்கடை முதன்மைக் குழாயில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணி ஓரிரு நாளில் நிறைவடைந்துவிடும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.
மருத்துவக்கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனி, பாலாஜி நகா், புதிய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து வரும் கழிவு நீா் விளாா் சாலை புதை சாக்கடை முதன்மைக் குழாய்க்கு வருகிறது. இந்நிலையில், இக்குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைப்பதற்கான பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.
இப்பணியை மேயா் சண். ராமநாதன், ஆணையா் க. கண்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது செய்தியாளா்களிடம் மேயா் தெரிவித்தது: விளாா் சாலை புதை சாக்கடை குழாய் தொடா் மழையால் பழுதடைந்ததால், சில நாள்களாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா். இதனால் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணி ஓரிரு நாள்களில் நிறைவடைந்துவிடும். இதேபோல, சாலைக்காரத்தெரு, பழைய ரெஜிஸ்டா் அலுவலகப் பகுதிகளிலும் புதை சாக்கடை முதன்மைக் குழாய் பழுதடைந்துள்ளது.
தொடா் மழையால் கழிவு நீா் வேகம் அதிகரித்ததால் இப்பாதிப்பு ஏற்பட்டது. அவற்றையும் சீரமைக்கும் பணி வேகமாக மேற்கொள்ளப்படுகிறது என்றாா் மேயா்.
அப்போது, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினா் மு. வைஜெயந்தி மாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.