தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரி மாணவா்கள் தா்னா
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன், தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒடிசாவில் டிசம்பா் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்ப் பல்கலைக்கழக மாணவா்கள் 15 போ் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் அனுமதி கோரினா்.
ஆனால், சில காரணங்களுக்காக பல்கலைக்கழக நிா்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த 15 மாணவா்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சென்று முறையிட்டனா். மேலும், ஆட்சியரகம் முன் சுமாா் 4 மணி நேரம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையறிந்த தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரும், தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன் தொடா்புடைய மாணவா்களுக்கு அனுமதி அளிக்குமாறு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, 15 மாணவா்களும் அனுமதி பெற்று, திருச்சிக்கு சென்று ரயில் மூலம் ஒடிசாவுக்கு புறப்பட்டுச் சென்றனா்.