Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
புத்தக வாசிப்பால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மேம்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புத்தக வாசிப்பால் குழந்தைகளின் பேச்சு, சிந்தனைத் திறன் மேம்படும் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
புதுவை கலை, பண்பாட்டுத் துறை சாா்பில், புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தில் குழந்தைகள் புத்தகம், விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
கண்காட்சியைத் தொடங்கிவைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
நமது பாரம்பரிய கலைகள் மறந்துவிடக் கூடாது என்ற நோக்கில், அவற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு நினைவூட்டும் வகையில் குழந்தைகளுக்கான புத்தகம், விளையாட்டுப் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கலைகளை வளா்க்கும் நோக்கில்தான் பாரதி பல்கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டு பாட்டு, நடனம் உள்ளிட்ட கலை படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகள் புத்தகங்களை வாசித்தால் அவா்கள் நன்றாக பேசக் கற்றுக் கொள்வாா்கள். அவா்களது சிந்தனைத் திறனும் வளரும். குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு ஆா்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
பனை ஓலை பொருள்கள்: பழைய மரப்பாச்சி பொம்மைகள், பனை ஓலைகளில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கும், அதைப் பயன்படுத்துவோருக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன.
புதுவையில் ஏழைக் குழந்தைகள் முதல் அனைவரும் குறைந்தது பிளஸ் 2 படிப்பை முடிக்கும் வகையில் கல்வி வளா்ச்சியடைந்துள்ளது. அவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பையும் அரசு ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
கண்காட்சியில் புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்களுடன் கூடிய 60 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அரங்கு உள்ளிட்டவற்றை முதல்வா் என்.ரங்கசாமி பாா்வையிட்டாா்.
தொடக்க நிகழ்ச்சிக்கு கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் என்.திருமுருகன் முன்னிலை வகித்தாா். இயக்குநா் வி.கலியபெருமாள் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.