Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
புனே: 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் கைது மோசடி; ரூ. 1 கோடி பறிபோனதால் அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்
மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் இணையதளக் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் தங்களது கடைசி காலத்திற்காகச் சேமித்து வைத்ததை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த 78 வயது முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.58 கோடியைப் பறித்தனர். தற்போது புனேயைச் சேர்ந்த 82 வயது முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.1.19 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.
தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் என்றும், சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் கூறி இந்த மோசடியைச் செய்துள்ளனர். புனேயைச் சேர்ந்த 82 வயது முதியவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்கள் மூன்று பேரும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

மர்ம நபர்கள் போன் செய்து மூன்று மகள்கள் மீதும் பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறி முதியவரை 3 நாட்கள் சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து வைத்திருந்தனர்.
முதன் முதலில் ஆகஸ்ட் 16ம் தேதி மர்ம நபர் போன் செய்து, தான் மும்பை என்கவுண்டர் பிரிவு போலீஸ் அதிகாரி என்று கூறி பேசினார். அவர் முதியவரிடம் உங்களது வங்கிக் கணக்கும், ஆதார் கார்டும் தனியார் ஏர்லைன்ஸ் பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
மற்றொருவர் போன் செய்து டெல்லியிலிருந்து ஐ.பி.எஸ் அதிகாரி பேசுவதாகவும், கணவன், மனைவி இரண்டு பேரும் பணமோசடியில் ஈடுபட்டு இருப்பதால் உங்களை டிஜிட்டலில் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்காக போன் வீடியோவை ஆன் செய்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
போன் ஆனில் இருக்கும்போது முதியவரிடம் அவரது வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் மூலம் அவரிடமிருந்த ரூ.1.19 கோடி பணத்தை 5 வங்கிக்கணக்குகளுக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.
முதியவர் தன்னிடமிருந்த பணம், தனது மகள்கள் அனுப்பிய பணம் என அனைத்தையும் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். திடீரென அவர்கள் போன் இணைப்பைத் துண்டித்துக்கொண்டனர்.
அதன் பிறகுதான் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சியில் அப்படியே மயங்கி விழுந்தார். அவரை அவரது 80 வயது மனைவி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
அதனைத்தொடர்ந்தே அவரின் 80 வயது மனைவி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.


















