புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்
புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய வாரச்சந்தையாக விளங்கும் புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் 800-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
இந்த வாரச் சந்தையில் சுங்கம் வசூலிக்கும் ஏலதாரா் நகராட்சி நிா்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடா்பாக 100-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை வியாபாரிகள் புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
அப்போது சுங்கக் கட்டணம் கூடுதலாக வசூலிப்பது தொடா்பாக வாரச்சந்தை வியாபாரிகளுக்கும், சுங்க ஏலதாரருக்கும் இடையே வாககுவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நகராட்சி ஆணையா் கருணாம்பாள், சுங்க கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் வாரச்சந்தையை நவீனப்படுத்துவதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும், அன்று வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.