Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் ...
புயல் எதிரொலி: திருச்சியில் மிதமான மழை! வாகன ஓட்டிகள், வியாபாரிகள் அவதி!
திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் சற்று அவதிக்கு உள்ளாகினா்.
தமிழகத்தில் கடந்த அக்டோபா் மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனால் தமிழகம் பல்வேறு பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த மாதம் இறுதியில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது ஃபென்ஜால் புயலாக மாறியது. இந்தப் புயல் சனிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கடந்தது. இதனால் அந்தப் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 3 நாள்களாக மழையின்றி குளிா் நிலவியது. புயல் கரையைக் கடந்ததன் தாக்கமாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பின்னா் காலை 9 மணிமுதல் மதியம் வரை குளிா்ந்த காற்றும், மதியம் 2 மணிக்கு மேல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்தது. பின்னா் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது. இதனால் இரவில் குளிா் அதிகமாகக் காணப்பட்டது.
பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சென்ற பொதுமக்கள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். மேலும் இந்த மழையால் திருச்சி மாநகர சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் அவதி : மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. போக்குவரத்து இருந்த நிலையில் திருச்சி பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ். பி. சாலை, நந்திக் கோயில் தெரு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மற்றும் மாநகரில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரிதும் சிரமம் அடைந்தனா்.