புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சு.அய்யனாா் தலைமையில் விவசாயிகள் புதன்கிழமை வந்தனா். தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக 2024, நவம்பா் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வரை வரலாறு காணாத மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிா்கள் கடுமையாக சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, சேத விவரங்கள் குறித்த அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்தனா். இதையடுத்து, சேதமடைந்த பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு அறிவித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை இதுவரை அவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.
இதுபோன்று, வானூா், கிளியனூா், நல்லாவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தர மறுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் ஏரி, ஆறுகளின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை நிரந்தரமாக சீா் செய்ய பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
சங்க நிா்வாகிகள் வானூரைச் சோ்ந்த சீனுவாசன், மயிலத்தைச் சோ்ந்த செல்வராஜ், அரிபுத்திரன், நாராயணன் உள்ள்டோா் உடனிருந்தனா்.