``புற்றுநோயால் அவதிப்படும் ஜோ பைடன் நலம் பெற வேண்டுகிறோம்'' - ட்ரம்ப், கமலா ஹாரிஸ், ஒபாமா பதிவு
அமெரிக்கவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 1942-ம் ஆண்டு நவம்பர்-20 ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 82. இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிக்கல்களை எதிர்கொண்டார்.
ட்ரம்ப்புடனான நேரடி விவாதத்தில் இதை ட்ரம்ப் குறிப்பிட்டுப் பேசியிருந்தது உலகளவில் கவனிக்கப்பட்டது. அதன் பிறகே, அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முன்நிறுத்தப்பட்டார்.

ஜோ பைடனுக்கு புற்றுநோய்
இந்த நிலையில், தற்போது ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதியாகியிருக்கிறது. இது தொடர்பாக அவரின் ஜனநாயகக் கட்சி அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ``முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை செய்தபோது அவருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது.
அதன்பிறக்கான சோதனையில் புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இப்போது, பைடன் குடும்பத்தினர் எந்த மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனத் திட்டங்களுக்கான விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
எட்டு ஆண்களில் ஒருவருக்கு
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அறிக்கையில், அமெரிக்காவில் எட்டு ஆண்களில் ஒருவருக்கு இந்தப் புற்றுநோய் கண்டறியப்படுவதாகக் கூறுகிறது.
ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சையில் குணப்படுத்த முடியும். என்றாலும், ஆண்களில் புற்றுநோய் தொடர்பான இறப்புக்கு இது இரண்டாவது முக்கிய காரணமாகும். புற்றுநோயின் 9 கிரேடு மதிப்பீடு படி இந்தப் புற்றுநோய் 5-வது கிரேடு வழங்கப்படுகிறது.

தலைவர்கள் பதிவு!
ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் ஜோ பைடனின் மனைவியை குறிப்பிட்டு, ``இந்தச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஜோ பைடன் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறர்.
கமலா ஹாரிஸ்,``ஜோ பைடன் தனது வாழ்க்கையையும் தலைமையையும் எப்போதும் வலிமையுடன் வரையறுத்திருக்கிறார். அதே வலிமை, நம்பிக்கையுடன் இந்த சவாலையும் எதிர்கொள்வார் என்பது எனக்குத் தெரியும். முழுமையாக, விரைவாக அவர் நலம் பெறுவார் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், "என் மனைவி மிச்செல்லும் நானும் பைடன் பற்றியும், அவரின் குடும்பத்தைப் பற்றி சிந்திக்கிறோம். புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகளைக் கண்டுபிடிக்க கடுமையாக சிந்திக்கிறார்கள்.
ஜோ பைடன் தனது தனித்துவமான உறுதியுடனும், கருணையுடனும் இந்த சவாலை எதிர்த்துப் போராடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விரைவான மற்றும் முழுமையாக குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜோ பைடனின் மகன் பியூ பைடனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2015-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.