ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பிடித்துள்ளது.
தமிழகத்தில் 8 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பணியிட கலாசார ஆலோசனை நிறுவனமான அவதாா்’ குழுமம் ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ எனும் ஆராய்ச்சி முடிவுகளை புதன்கிழமை வெளியிட்டது.
இது குறித்து அந்தக் குழும தலைவா் சௌந்தா்யா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக உள்ளன. இதில் பெண்கள் எப்படி வாழ்கிறாா்கள், வேலை செய்கின்றனா், வளா்கிறாா்கள் என்பதை நகரங்கள் வடிவமைக்கின்றன. எனவே, பெண்களின் முன்னேற்றத்துக்கு நகரங்களின் அடிப்படை கொள்கைகள், கலாசார அமைப்பு குறித்த தெளிவான புரிதல் முக்கியமானது.
அதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பா் வரை நாடு முழுவதும் உள்ள 60 நகரங்களில் உள்ள 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சமூக உள்ளடக்க மதிப்பெண், தொழில் துறை உள்ளடக்க மதிப்பெண், மக்கள் அனுபவ மதிப்பெண் ஆகிய 3 குறியீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், மாநிலங்கள் வாரியான மதிப்பீட்டில் கேரளம் 20.89 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், தெலங்கானா 20.57 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் 19.93 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும், 19.38 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.
நகரங்கள் வாரியான மதிப்பீட்டில் குருகிராம் 10-க்கு 7.68 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. பெரிய நகரங்களில் மும்பை 7.60 மதிப்பெண்ணும், பெங்களூரு 7.54, சென்னை 7.08, ஹைதராபாத் 6.95, திருவனந்தபுரம் 5.51 மதிப்பெண்ணும் பெற்றுள்ளன.
சிறிய நகரங்களில் கோவை 7.75 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், கொச்சி 7.41 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அதுபோல் கோவை, புணே, சென்னை ஆகிய நகரங்கள் வாழ்க்கைத் தரத்திலும், திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் பாதுகாப்பிலும் முதல் 3 இடங்களில் உள்ளன என்றாா் அவா்.