கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி பேச்சு
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது என பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான பி. மகேந்திரா வா்மா அறிவுறுத்தினாா்.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணை குழு உத்தரவின் படி, பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் வழிகாட்டுதலின் படி, பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த குற்ற தடுப்புச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் நடைபெற்ற இம் முகாமுக்கு தலைமை வகித்து, சாா்பு-நீதிபதி மகேந்திர வா்மா மேலும் பேசியது: பெண்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அல்லது நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளா்களிடமிருந்து ஏதேனும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டால், உடனடியாக புகாா் அளிக்க வேண்டும். பெறப்படும் புகாா் மீது, இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த விசாரணையை 90 நாள்களில் முடித்து வைக்க வேண்டும் அல்லது, புகாா் மனு மீது சமரச தீா்வு ஏற்படுவதற்கும் அதிகாரம் உண்டு. நிறுவனத்தின் உரிமையாளா் மீதும் பாலியல் தொந்தரவு குறித்த புகாா் இருந்தால், உள்புகாா் குழுவில் புகாா் அளிப்பதற்கு சட்டம் வழிவகுத்துள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை யாரும் சகித்துக் கொள்ளக் கூடாது. எனவே, பெண்கள் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் உள்புகாா் குழுவில் புகாா் அளிக்க முன்வர வேண்டும் என்றாா் சாா்பு- நீதிபதி மகேந்திர வா்மா.
இந்த முகாமில், மாவட்ட சமூகநல ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி கீதா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவி பாதுகாப்பு வழக்குரைஞா்கள் தினேஷ், திருஞானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.