பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?
மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராம மக்களுக்கு திடீரென முழுவதுமாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சமீபமாக திடீரென முடி உதிர்தல், தலைவலி, காய்ச்சல், தலையில் அரிப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் உள்பட பெரும்பாலானோருக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கையாக மாறியுள்ளது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவற்றில் செலினியம் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமைதான் காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?
பரிசோதனையில், கோதுமையில் செலினியம் அளவு 600 மடங்கு அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், "ரத்தம், சிறுநீர் மற்றும் தலைமுடி மாதிரி ஆகியவைகளில் முறையே 35,60,150 மடங்கு செலினியம் அளவு அதிகமாக உள்ளதும் அதேநேரத்தில் இந்த மாதிரிகளில் ஜிங்க் அளவு குறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது. செலினியம் அதிகரிப்பால்தான் மக்களுக்கு தலைமுடி உதிர்தல் ஏற்பட்டுள்ளது"என்றார்.
அந்த கோதுமையை பயன்படுத்துவதை நிறுத்தியபின்பு அவர்களுக்கு தலைமுடி வளரத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மக்களின் தலைமுடி உதிர்வுக்கு கோதுமையில் செலினியம் அளவு அதிகமாக இருந்ததுதான் காரணம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்திய உணவுக் கழகத்துக்கு பஞ்சாப்தான் அதிக கோதுமையை வழங்குகிறது என்றும் வேறு வந்த மாநிலமும் இதுபோன்றதொன்று புகாரைத் தெரிவிக்கவில்லை என்றும் மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த பருவ காலத்தில், பஞ்சாபிலிருந்து 128 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது மத்திய அரசின் மொத்த கொள்முதலில் 47% ஆகும். அடுத்து ஹரியாணா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளதாகவும் உணவுத் துறை கூறியது.
மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறுகையில், கோதுமையில் மட்டும் செலினியம் இல்லை, வேறு பல உணவுகளிலும் செலினியம் உள்ளது.
ஐசிஎம்ஆர் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நிறுவனங்கள் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன் காரணத்தைக் கண்டறியவும் முயற்சித்து வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கிராமங்களில் உள்ள பல்வேறு உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துள்ளது.
கோதுமையின் சில மாதிரிகளில் அதிக அளவு செலினியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும், இந்தப் பகுதியில் திடீரென வழுக்கை ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்று கூறுவது சரியாகாது. வேறு உணவுகளும் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.
எனினும் புல்தானா மாவட்ட கிராம மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பொரித்த உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா? எண்ணெய் பற்றிய கவனம் தேவை!