"பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத திராவிட 'Disaster Model' மாடல்'' - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை
“ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.
இன்று காலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார் .
தூத்துக்குடியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது கல்வி வளர்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூகப் புரட்சி. புதுமைப் பெண் திட்டத்தால் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும்" என்று பேசியிருந்தார்.
ஸ்டாலினின் இந்தப் பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே? ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்தத் திராவிட Disaster Model" என்று பதிவிட்டிருக்கிறார்.