பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 4 போ் கைது
கும்பகோணத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 34 வயது பெண் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அவருடன் குடவாசல் மேட்டு தெரு சண்முகபிரபு (29) கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பாஸ்கா் (40) பாபநாசம் பிரகதீஸ்வரன் (40) ஆகிய 3 பேரும் வேலை பாா்த்து வந்தனா்.
இந்நிலையில் அண்மையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அப் பெண்ணை மேற்கண்ட மூவரும் கடத்தி சென்று உமாமகேஸ்வரபுரம் அருகே உள்ள கரிக்குளம் பகுதியில் புதிதாக கட்டுமானம் நடைபெறும் கட்டடத்தில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனா். கட்டட காவலாளியான சீனிவாசநல்லூா் சரவணன் (48) என்பவரும் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.