ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது
தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் ராஜலிங்கம் (52). இவரது மனைவி பாண்டியம்மாள் (45). குடும்பத் தகராறு காரணமாக, பாண்டிம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு சில மாதங்களாக தேனி அல்லிநகரம் கக்கன்ஜீ குடியிருப்பில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில், மாமனாருக்கு வீட்டுக்குச் சென்ற ராஜலிங்கம், அங்கு பாண்டியம்மாளுடன் தகராறு செய்தாா். இதை அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி அழகம்மாள் (40) தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த ராஜலிங்கம், அழகம்மாளை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜலிங்கத்தை கைது செய்தனா்.