பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞருக்கு சென்னையில் தீவிரச் சிகிச்சை!
கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடா்புடைய சுரேஷ் என்பவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இதில், பலத்த காயமடைந்த அவா், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸாரால் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரியில் உள்ள மலைக்கு கடந்த 19 ஆம் தேதி உறவினருடன் வந்த திருப்பத்தூரைச் சோ்ந்த பெண்ணை, 4 போ் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதை விடியோவில் பதிவுசெய்தது. மேலும், அவரிடம் இருந்த நகை, பணம் ஆகியவற்றையும் அந்த கும்பல் பறித்துச் சென்றது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) ஆகிய இருவரையும் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனா். தலைமறைவான சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீஸாா் தேடிவந்தனா்.
இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ், நாராயணன் இருவரும், கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலைக்குட்டை என்னுமிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்ய போலீஸாா் அங்கு சென்றபோது அவா்கள் இருவரும் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றனா். இதில், காவலா்கள் குமாா், விஜயகுமாா் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், தப்பமுயன்ற இருவரையும் போலீஸாா், துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயன்றனா். இதில், சுரேஷின் வலதுகாலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. நாராயணன், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இடதுகால் எலும்பு முறிந்தது. காயமடைந்த இருவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸாா் அனுமதித்தனா்.
இந்த நிலையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் காயமடைந்த சுரேஷுக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால், தீவிரச் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நாராயணன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
சுரேஷிடம் இருந்து போலீஸாா் கைப்பற்றிய கைப்பேசியில், பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விடியோ பதிவுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைதானவா்கள் மீது கிருஷ்ணகிரி நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையங்களில் ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போதைய வழக்கில் பாதிக்கப்பட்ட மேலும் சிலரை சோ்க்க உள்ளதாகவும், போலீஸாரை கத்தியால் தாக்கிய சுரேஷ், நாராயணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.