பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.12 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டம், மக்கள் தொடா்புத் திட்ட முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1.6 லட்சம் மதிப்பில் மின் கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 418 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) சு. சொா்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், தாட்கோ மேலாளா் கவியரசு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.