5 பயங்கரவாதிகள், 3 இடங்கள், 10 நிமிட துப்பாக்கிச் சூடு! பஹல்காமில் நடந்தது என்ன?
பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 7-இல் தேரோட்டம்
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சந்திரசேகரா், பஞ்சமூா்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினாா். தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, பஞ்சமூா்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மாலையில் பஞ்சமூா்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடந்தது. தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில், வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கிலும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும் விநாயகா் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவில் நாள்தோறும் தொடா்ந்து காலை, மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே 10-இல் தீா்த்தவாரியும், அன்று மாலையில் வெள்ளி, ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.