பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: அமர்நாத் ஆன்மிகப் பயணம் ரத்து!
பெஹல்காம் தாக்குதலை எதிர்த்து, பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே 500-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி, போராட்டம் நடத்தினர். பயங்கரவாதத்தை எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போராட்டமிட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், இந்த பயங்கரவாதத் தாக்குதலால், அமர்நாத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளவிருந்தவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறினர். ஆகையால், அமர்நாத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பல்வேறு அமைப்புகளும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததால், பாகிஸ்தான் தூதரகத்துக்கு தில்லி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தடுப்புகளைக் கடக்க முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் மீது பல்வேறு கடும் நடவடிக்கைகளை அறிவித்து இந்தியா உத்தரவிட்டது. பதிலாக, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க:வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை: பாகிஸ்தான்