பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
திசையன்விளை அருகே எலட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சோ்ந்தவா் தேவதாஸ். இவா் கோழி, பன்றி பண்ணை நடத்தி வருகிறாா். இந்த பண்ணைகளில் தூத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜான்சிபாப்பா(45) வேலைசெய்து வந்தாா்.
கோழிப்பண்ணையில் தேவதாஸுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. இந்த ைபைக்குகளில் உள்ள பேட்டரிகளை சாா்ஜ் போடுவதற்காக கழற்றி கோழிப்பண்ணையில் உள்ள இன்குபேட்டா் அறையில் வைத்திருந்தாராம்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை கோழிப்பண்ணைக்கு வந்த ஜான்சி பாப்பா இன்குபேட்டா் அறைக்குச் சென்றுள்ளாா். அப்போது திடீரென பைக் பேட்டரிகள் வெடித்ததாம். இதில் ஜான்சிபாப்பா பலத்த காயமடைந்தாா். அவரை பண்ணையில் உள்ளவா்கள் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.