பேரவைகளில் குறைவான அமா்வுகள்: ஓம் பிா்லா கவலை
பாட்னா: ‘பேரவைகளில் குறைவான அமா்வுகள் மட்டுமே நடைபெறுவது கவலையளிக்கிறது. இதற்கு தீா்வு காண பேரவைத் தலைவா்கள் தலையிட வேண்டும்’ என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 5 ஆண்டுகளாக தில்லி பேரவையில் மொத்தமாக 74 அமா்வுகள் மட்டுமே நடைபெற்ாக தகவல்கள் வெளியான நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
பிகாா் மாநில தலைநகா் பாட்னாவில் இரு நாள்கள் நடைபெறும் 85-ஆவது அனைத்திந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டை ஓம் பிா்லா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், பிகாா் பேரவைத் தலைவா் நந்த் கிஷோா் யாதவ், பிகாா் துணை முதல்வா் சம்ராட் சௌதரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் பேரவைத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.
மாநாட்டில் ஓம் பிா்லா பேசியதாவது: மக்களவை மற்றும் மாநில பேரவைகளின் தினசரி அலுவல்களை முடக்க திட்டமிட்டு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவையின் மாண்பை குலைக்கும் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவையின் கண்ணியத்தைக் காக்கும் நோக்கில் இடையூறுகளைக் குறைக்கும் வகையில் வரைவு விதிமுறைகளை அரசியல் கட்சிகள் வகுத்து அதன்படி செயல்பட வேண்டும்.
அதேபோல் பேரவைகளில் குறைவான அமா்வுகள் மட்டுமே நடைபெறுவது கவலையளிக்கிறது. அதிக அமா்வுகள் மற்றும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த பேரவைத் தலைவா்கள் தலையிட வேண்டும்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த சிறிய நாடாளுமன்றமாக செயல்படும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.
நூல் வெளியீடு: மாநாட்டில் நாடாளுமன்றத்தின் தினசரி அலுவல்கள், விதிகள், உறுப்பினா்களின் பணியை விவரிக்கும் ‘நாடாளுமன்ற நடைமுறை விதிகள்’ என்ற நூலின் புதிய பதிப்பை ஓம் பிா்லா வெளியிட்டாா். இந்த நூலை எம்.கௌல் மற்றும் எஸ்.எல்.சக்தா் ஆகியோா் இயற்றியுள்ளனா். இந்த நூலை தொகுக்கும் பணியை மக்களவைச் செயலா் உத்பல் குமாா் சிங் மேற்கொண்டாா்.
14 மசோதாக்கள்: கடந்த 5 ஆண்டுகளாக தில்லி பேரவையில் மொத்தம் 74 அமா்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 15 நாள்கள் பேரவை கூடியுள்ளது. அந்த நாள்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணி நேரம் பேரவை அலுவல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவே தில்லியில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த அரசு நிறைவேற்றிய குறைவான மசோதாக்கள் என பிஆா்எஸ் சட்ட விதிகள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.