Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத...
பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இருமுனை போட்டி: கே.பி.முனுசாமி
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இடையே இருமுனைப் போட்டிதான் இருக்கும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி பேசினாா்.
கிருஷ்ணகிரியில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் கிருஷ்ணகிரி எம்எல்ஏவுமான கே.அசோக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது: தமிழகத்தில் அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சி அமைத்துள்ளன. தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில்லை. 2026-இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே இருமுனைப் போட்டி தான் இருக்கும்.
இந்தத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் அதிமுகவுக்கு முக்கியமான தோ்தல். எனவே, வாக்குச்சாவடி முகவா்கள், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதை பொதுமக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இதற்காக நீங்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.